இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஃபுளோரஸ் தீவு கடற்பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், கடலோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் பதிவானது. உள்ளூர் நேரப்படி காலை 5.58 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம், கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தின் எண்டே நகருக்கு வடமேற்கே சுமார் 68 கி.மீ. தொலைவில், 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்தது.
இந்தோனேசிய வானிலை, காலநிலை மற்றும் புவியியல் முகமை (BMKG), கிழக்கு மற்றும் மேற்கு நுசா தெங்கரா, தெற்கு சுலவேசி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. கடலோரப் பகுதிகளில் 0.5 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை அலைகள் எழ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.



