உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார் பிரதமர் மோடி: யாங்கி நினைவிடத்தில் அந்நாட்டு அதிபருடன் மரியாதை!

தாஷ்கண்ட்: உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் சென்றடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவுடன் இணைந்து புகழ்பெற்ற ‘யாங்கி உஸ்பெகிஸ்தான்’ நினைவிடத்திற்குச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
உஸ்பெகிஸ்தான் நாட்டு மக்களின் வரலாற்றுப் பெருமை, எதிர்காலக் கனவுகள் மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த ‘யாங்கி உஸ்பெகிஸ்தான்’ நினைவிடம் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, நினைவிடத்தின் சிறப்புகள் குறித்து விளக்கப்பட்டது.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “தாஷ்கண்ட் வந்திறங்கியதும் அதிபர் மிர்சியோயேவுடன் இணைந்து யாங்கி உஸ்பெகிஸ்தான் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தேன். இந்த நினைவிடம் உஸ்பெக் மக்களின் லட்சியங்களையும் முன்னேற்றத்தையும் பிரதிபலிக்கிறது. எனது உஸ்பெகிஸ்தான் பயணத்தை இங்கிருந்து தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.



