புதுச்சேரி மண்ணின் மைந்தர்களுக்கு கல்வியில் கூடுதல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஜோஸ் சார்லஸ் மார்டின் வலியுறுத்தல்
புதுச்சேரி: புதுச்சேரி மாநில மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, பிற மாநிலங்களைப் போன்று இங்கும் மண்ணின் மைந்தர்களுக்கு கல்வி வாய்ப்புகளில் கூடுதல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் அங்குள்ள உள்ளூர் மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் பல்வேறு வாய்ப்புகளில் முன்னுரிமையும், குறிப்பிடத்தக்க இடஒதுக்கீட்டுச் சலுகைகளும் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், புதுச்சேரியில் இங்குள்ள உள்ளூர் மாணவர்களுக்கு அத்தகைய அளவில் போதுமான கூடுதல் இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அங்குள்ள பூர்வகுடி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, புதுச்சேரி அரசும் நமது பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், அதே போன்ற கூடுதல் இடஒதுக்கீட்டு நடைமுறையை இங்கும் உடனடியாக அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.