புதுச்சேரி

மேகதாது அணை திட்டத்தை புதுச்சேரி அரசு தீவிரமாக எதிர்க்க வேண்டும்: சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ. மீனாட்சி சுந்தரம் வலியுறுத்தல்!

புதுச்சேரி, ஆக. 30: கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்தை புதுச்சேரி அரசு தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்றும், காரைக்கால் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் திருப்பட்டினம் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. மீனாட்சி சுந்தரம் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.

புதுச்சேரி சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது: காவிரி நீரின் கடைமடைப் பகுதியான காரைக்காலின் விவசாய உரிமையைப் பாதுகாக்க மேகதாது அணை திட்டத்தை புதுச்சேரி அரசு உறுதியாக எதிர்க்க வேண்டும். பருவமழைக்கால நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க அரசலாறு உள்ளிட்ட நீர்வழிகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க ரூ.3.22 கோடி கூட்டுறவுக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும். பொதுப்பணித்துறையில் 16 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் 1,300-க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்து உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

காரைக்காலில் அமையவுள்ள பல்துறை சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு ஒற்றைச் சாளர முறையில் விரைந்து அனுமதியளித்து, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான நிரவி மற்றும் திருப்பட்டினத்தில் புதிய தீயணைப்பு நிலையங்களை அமைக்க வேண்டும். அத்துடன் நிரவி, விழுதியூர் சுகாதார நிலையங்களுக்கு ஓட்டுநர்களுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர் பேசினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன