நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தை முழுமையாக மேம்படுத்த வேண்டும்: சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் வலியுறுத்தல்!
காரைக்கால் மாவட்டம், நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தை அனைத்து வசதிகளுடன் முழுமையாக மேம்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிரவி – திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் புதுச்சேரி சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், நிரவி ஆரம்ப சுகாதார நிலையம் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மிக பழமையான கட்டிடத்தில் இயங்கி வருவதாகவும், போதிய இடவசதி மற்றும் அத்தியாவசிய கட்டமைப்பு வசதிகள் இன்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார். எனவே, பொதுமக்கள் நலன் கருதி இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை நவீன வசதிகளுடன் தரம் உயர்த்த வேண்டும் என்றார்.
மேலும், அங்கு போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், ஈசிஜி (ECG) உள்ளிட்ட அத்தியாவசிய பரிசோதனை வசதிகள், அவசர சிகிச்சை வசதிகள், தாய்-சேய் மற்றும் முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவ சேவைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதற்கான நிதியை விரைவாக ஒதுக்கி, பணிகளைத் தொடங்குவதற்கான காலக்கெடுவை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.
