கிராம பஞ்சாயத்து ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க: புதுச்சேரி சட்டப்பேரவையில் ஏ.எம்.எச். நாஜிம் ஆவேச பேச்சு!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றி வரும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், ஒப்பந்த பேராசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம், “புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் தினக்கூலி அடிப்படையில் ஏராளமான ஊழியர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அவர்களை ஏன் இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை? அரசு உடனடியாக அவர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் பேராசிரியர்களின் பிரச்சனைகளை சுட்டிக்காட்டினார். ஒப்பந்த பேராசிரியர்களுக்கு எவ்வித பணி பாதுகாப்பும் இல்லாத சூழல் நிலவுவதாகவும், அவர்கள் தினந்தோறும் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்த அவர், அரசு தலையிட்டு பேராசிரியர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.


