புதுச்சேரியில் 17-வது மாநில சப்-ஜூனியர் கோகோ சாம்பியன்ஷிப் போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு!
புதுச்சேரி, செப். 16:
புதுவை அமெச்சூர் கோ-கோ அசோசியேஷன் சார்பில் சிறுவர், சிறுமியர்களுக்கான மாநில அளவிலான 17-வது சப்-ஜூனியர் கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டிகள் கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் புதுவையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் பிரிவில் 16 அணிகளும், சிறுமியர் பிரிவில் 10 அணிகளும் உற்சாகத்துடன் பங்கேற்றன.
போட்டியின் துவக்க விழா நிகழ்வில் வீமகவுண்டன்பாளையம் சந்திரன், தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரூபஸ் மற்றும் என்.ஆர்.டி.யு.சி. மாநில செயலாளர் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்தனர்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சிறுவர்கள் பிரிவில் மேல் திருக்காஞ்சி மண்வாசம் இளைஞர் நற்பணி மன்ற அணி முதலிடத்தையும், மங்கலம் பீனிக்ஸ் விளையாட்டுக் கழகம் 2-ம் இடத்தையும், வீமநகர் என்.ஆர். ஸ்போர்ட்ஸ் கிளப் 3-ம் இடத்தையும் கைப்பற்றின. அதேபோல் சிறுமியர் பிரிவில் வீமநகர் என்.ஆர். ஸ்போர்ட்ஸ் கிளப் முதலிடத்தையும், வீமநகர் ஜி.என்.சரவணன் ஸ்போர்ட்ஸ் கிளப் 2-ம் இடத்தையும், கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை ஸ்போர்ட்ஸ் கிளப் 3-ம் இடத்தையும் தட்டிச் சென்றன.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு அமெச்சூர் கோகோ அசோசியேஷன் தலைவர் தனகோடி தலைமை தாங்கினார்; செயலாளர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வர் தினகர் நல்லம்மாள், வீமநகர் வழக்கறிஞர் ரவி, ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மலையன், பார்த்திபகுமார் மற்றும் மின்வாரிய எல்.பி.எப். பொதுச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர் துரை வரவேற்புரையாற்றினார். பயிற்சியாளர் சீனிவாசன் மற்றும் நடுவர்கள் போட்டிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
