புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா: மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம்!
புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றன. அதிகாலையில் பெய்த இடியுடன் கூடிய மழையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து காலை 5 மணியளவில் மணக்குள விநாயகருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட நறுமண திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மூலவர் மற்றும் உற்சவருக்கு பிரம்மாண்ட தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, பலவண்ண மலர்கள் மற்றும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்கள் அனைவரும் விரைவாகவும் சிரமமின்றியும் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் இன்று தனிநபர் அர்ச்சனைகள் மற்றும் விசேஷ கட்டண பூஜைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. சர்வ திவ்ய தரிசனத்திற்கு தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு, தர்ம தரிசனம் மற்றும் ரூ.100 சிறப்பு தரிசன வழிகளில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோயிலுக்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடை சாத்தப்பட்டு, பின்னர் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

