தலைமை காவலர் ரேவதிக்கு பாராட்டுச் சான்றிதழ்: திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து!

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில் துணிச்சலுடன் உண்மை வெளிவர உதவிய தலைமை காவலர் ரா.ரேவதி, போக்சோ வழக்கில் சிறப்பாகச் செயல்பட்டு பாராட்டுச் சான்றிதழ் பெற்றதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நிகழ்ந்த ஜெயராஜ் – பென்னிக்ஸ் காவல் மரண வழக்கில், எவ்வித அச்சுறுத்தலுக்கும் பணியாமல் உண்மையை வெளிக்கொண்டு வர முக்கிய சாட்சியமாக நின்று உறுதுணையாகச் செயல்பட்டவர் பெண் தலைமை காவலர் திருமிகு. ரா.ரேவதி. இவர் தற்போது சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ (POCSO) வழக்கு ஒன்றில் துரிதமாக விசாரணை நடத்தி, குற்றவாளிக்கு நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டனை பெற்றுத்தரச் சிறப்பாகப் பணியாற்றியதற்காக அவருக்கு உயர் அதிகாரிகளால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது வாழ்த்துச் செய்தியில், தலைமை காவலர் ரேவதியின் அர்ப்பணிப்பும் துணிச்சலும் தொடர்ந்து பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழட்டும் என்று குறிப்பிட்டு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.



