தாராபுரம் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவின் சொத்து விவரம் வெளியீடு!
தாராபுரம், செப். 17:
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தீவிரமடைந்துள்ள நிலையில், வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கலும், சொத்து விவரப் பட்டியல்களும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகா தனது வேட்புமனுவுடன் சொத்து விவரக் கணக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தின்படி, வேட்பாளர் கார்த்திகா பி.இ. (இ.சி.இ) பட்டப்படிப்பு முடித்துள்ளார். அவரிடம் ரொக்கக் கையிருப்பில் ரூ.20,000 மட்டுமே உள்ளது. அவரது அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சமாகவும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.80 லட்சமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவரிடம் 60 கிராம் தங்கம் உள்ளதாகவும், அதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.7.80 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், அவருக்கு சொந்தமாக எந்தவித வாகனங்களும் இல்லை என்பதும், வங்கிகளிலோ அல்லது பிறரிடமோ எவ்வித கடன்களும் இல்லை என்பதும் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
