புதுச்சேரி தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னையைச் சேர்ந்த நபர் அதிரடி கைது!
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மிரட்டல் விடுத்த சென்னையைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து கோரிமேடு காவல்துறையினர் உடனடியாக உஷார்படுத்தப்பட்டனர். வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் தலைமைச் செயலக வளாகம், அங்குள்ள அலுவலகங்கள் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பல மணி நேரம் நடைபெற்ற தீவிர சோதனைக்குப் பிறகு, சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் சிக்காததால் அந்த மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தலைமைச் செயலக வளாகத்தில் நிலவிய பதற்றம் தணிந்தது.
இதனிடையே, மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் எண்ணை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்திய போலீசார், சென்னையைச் சேர்ந்த சேஷஷைலாஷன் (வயது 40) என்பவரைக் கைது செய்தனர். அவர் எதற்காக இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்தார் என்பது குறித்தும், இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்தும் கோரிமேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

