தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சேது செல்வம் வேட்புமனு தாக்கல்!

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சேது செல்வம், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜுன் ராமகிருஷ்ணனிடம் தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்தார். முன்னதாக, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பகுதியிலிருந்து புதுச்சேரி மாநில திமுக தேர்தல் பொறுப்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., மற்றும் மாநில அமைப்பாளர் இரா. சிவா ஆகியோர் தலைமையில் கூட்டணிக் கட்சியினருடன் பிரம்மாண்ட ஊர்வலமாகச் சென்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம், மாநில துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், விக்னேஷ் கண்ணன், விக்கிரவாண்டி/விழுப்புரம் தொகுதி எம்எல்ஏ லட்சுமணன், வானூர் எம்எல்ஏ கௌதம் திராவிட மணி, முன்னாள் எம்எல்ஏக்கள் பூ. மூர்த்தி, நந்தா டி. சரவணன் மற்றும் திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., “தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளருக்கு மக்களிடையே அபரிமிதமான ஆதரவு உள்ளது. இத்தொகுதியின் 26 ஆயிரம் வாக்காளர்களுடன்தான் திமுக உண்மையான கூட்டணி வைத்துள்ளது. இந்த இடைத்தேர்தல் வெற்றி புதுச்சேரி அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தர திமுக தொடர்ந்து தீவிரமாக குரல் கொடுக்கும்” என்றார். இதனைத் தொடர்ந்து கவுண்டம்பாளையம் பகுதியில் திமுகவினர் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
