புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: குறிப்பிட்ட வழித்தடங்களில் செப். 20 அன்று மதுக்கடைகள் மூட உத்தரவு!

புதுச்சேரி, செப். 16: புதுச்சேரி நகரில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு, ஊர்வலம் செல்லும் முக்கிய வழித்தடங்களில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் பார்களை வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி குறிப்பிட்ட நேரம் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி கலால் துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
புதுச்சேரி கலால் விதிகள் 1970-இன் விதி எண் 199-A (ii)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, வரும் 20-09-2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது. சாரம் அவ்வை திடல் பகுதியிலிருந்து தொடங்கும் இந்த பிரமாண்ட ஊர்வலமானது காமராஜர் சாலை, நேரு வீதி, எம்.ஜி. ரோடு, அதிதி ஹோட்டல் சந்திப்பு, எஸ்.வி. பட்டேல் சாலை வழியாக கடற்கரை சாலையில் உள்ள பழைய நீதிமன்ற கட்டட எதிர்ப்பகுதி வரை சென்று கடலில் கரைக்கப்பட உள்ளது.
இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்க உள்ளதால், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும் பொது அமைதியை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கூறிய ஊர்வல வழித்தடங்களில் அமைந்துள்ள அனைத்து மதுபானக் கடைகள், மதுபானம் பரிமாறும் ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்ட் பார்களை செப்டம்பர் 20 அன்று மதியம் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கட்டாயம் மூடி வைக்குமாறு உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்படுகிறது.
இந்த உத்தரவை மீறி மது விற்பனையில் ஈடுபடும் கடைகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் துறை எச்சரித்துள்ளது.

