பிரதமர் மோடி பிறந்தநாளில் வீடுகளில் ஆசீர்வாத தீபம் ஏற்றுங்கள்: அமைச்சர் நமச்சிவாயம் அழைப்பு

புதுச்சேரி, செப். 16: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி பொதுமக்கள் மற்றும் அரசு நலத்திட்ட பயனாளிகள் அனைவரும் தங்களது இல்லங்களில் மாலையில் ஆசீர்வாத தீபம் ஏற்றி சிறப்பிக்க வேண்டும் என்று புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: குஜராத் மாநில முதல்வராக 13 ஆண்டு காலமும், பாரத நாட்டின் பிரதமராக 12 ஆண்டு காலமும் என மக்கள் சேவையில் அரசு தலைமைப் பொறுப்பில் பிரதமர் நரேந்திர மோடி மொத்தம் 25 ஆண்டுகள் நிறைவு செய்வதை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அவரது பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 17-ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு ‘சேவை உறுதிமொழி இயக்கமாக’ புதுச்சேரி மாநிலம் முழுவதும் பல்வேறு மக்கள் நல நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட உள்ளது.
பிரதமர் மோடி தனது பொது வாழ்வில் நேர்மை, அசாத்திய அர்ப்பணிப்பு மற்றும் கடுமையான உழைப்பின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். பாரத தேசத்தின் தொடர் வளர்ச்சியையே தனது உயிர்மூச்சாகக் கொண்டு அயராது உழைத்து வருகிறார். அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில், பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மேலும், சமுதாய நலனுக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் சிறந்த மனிதர்களைக் கண்டறிந்து கௌரவித்தல், இலவச மருத்துவ முகாம்கள் மற்றும் மரம் நடும் இயக்கங்கள் என பயனுள்ள ஆக்கப்பூர்வ நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.
குறிப்பாக, செப்டம்பர் 17-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் அன்று மாலை வேளையில், அனைத்து பொதுமக்களும் தங்களது இல்லங்களில் தீபமேற்றி அவரது தூய்மையான சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும். அத்துடன், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) அரசின் எண்ணற்ற நலத்திட்டங்கள் வாயிலாகப் பயனடைந்த பயனாளிகள் தங்களின் மனமார்ந்த நன்றியை வெளிப்படுத்தும் விதமாகத் தங்கள் இல்லங்களில் ‘ஆசீர்வாத தீபம்’ ஏற்றி வழிபட வேண்டும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கேட்டுக்கொண்டுள்ளார்.
