புதுச்சேரி

புதுச்சேரி சாரம் அவ்வை திடலில் 21 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை: விசர்ஜன ஊர்வலம் வரும் 20-ம் தேதி நடைபெறும்!

புதுச்சேரி, செப்.16: புதுச்சேரி விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் 42-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகத் தொடங்கியது. இதையொட்டி புதுச்சேரி சாரம் அவ்வை திடலில் அதிகபட்சமாக 21 அடி உயரத்தில் பிரம்மாண்ட விநாயகர் சிலை நிறுவப்பட்டு சிறப்பு வழிபாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

இவ்விழாவினை முன்னிட்டு கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழா பேரவை தலைவர் குமரகுரு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில பாஜக தலைவர் ராமலிங்கம் வரவேற்புரை ஆற்றினார். துணைத் தலைவர் ஆனந்த பாலயோகி பவானி ஆசியுரை வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் பூஜையைத் தொடங்கி வைத்தார். பேரவை நிர்வாகிகள் தணிகைவேல், ஸ்ரீதரன், சிவப்பிரகாசம், செந்தில்முருகன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

மேலும், செல்வகணபதி எம்.பி., அமைச்சர் சிவக்கொழுந்து, முன்னாள் சபாநாயகர் செல்வம் மற்றும் இந்து முன்னணி கோட்ட செயலாளர் முருகையன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழாவில் கலைமாமணி கோபக்குமார் மற்றும் மாணவர்களின் மிருதங்க இசை நிகழ்ச்சி பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.

புதுச்சேரி முழுவதும் இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மடுகரை, மதகடிப்பட்டு, பாகூர், காலாப்பட்டு உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த சிலைகள் அனைத்தும் வரும் 20-ந் தேதி அன்று பிரம்மாண்ட ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு புதுச்சேரி கடற்கரை மற்றும் நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்படவுள்ளன. இதனை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன