தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தலைவராக கே.கதிரவன் போட்டியின்றி தேர்வு: தேர்தல் அதிகாரி அறிவிப்பு!
சென்னை, செப். 16:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் புதிய தலைவராக வழக்குரைஞர் கே. கதிரவன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரியும், ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியுமான கே.என். பாஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் உள்ள 25 உறுப்பினர் பதவிகளில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நியமிக்கப்பட்ட 2 பெண் உறுப்பினர்கள் தவிர எஞ்சிய 23 உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த மார்ச் 30 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி நீதிமன்ற வளாகங்களில் நடைபெற்றது. 143 வழக்கறிஞர்கள் போட்டியிட்ட இத்தேர்தலில் பார் கவுன்சில் முன்னாள் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் உள்ளிட்ட 23 பேர் வெற்றி பெற்றனர். பெண் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற நீதிபதி வி.எம். வேலுமணி மற்றும் வழக்கறிஞர் சுதர்சனா சுந்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பார் கவுன்சில் தலைவர், துணைத் தலைவர் மற்றும் அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் ஆகிய நிர்வாகப் பதவிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைமுறைகள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் தலைவர் பதவிக்கு வழக்கறிஞர் கே. கதிரவன், துணைத் தலைவர் பதவிக்கு வழக்கறிஞர் இ. பாலமுருகன், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு வழக்கறிஞர் பி.எஸ். அமல்ராஜ் ஆகியோர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேறு எவரும் மனுத்தாக்கல் செய்யாததால், மூன்று முக்கியப் பதவிகளுக்கும் இவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி ஓய்வுபெற்ற நீதிபதி கே.என். பாஷா முறைப்படி அறிவித்தார். புதிய நிர்வாகிகளுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
