புதுச்சேரி – இலங்கை இடையே வர்த்தகம், முதலீட்டை மேம்படுத்த புதிய முன்னெடுப்பு: தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் ஆலோசனை!
புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் இலங்கை இடையேயான வர்த்தகம் மற்றும் தொழில் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை புதிய தளத்திற்கு கொண்டு செல்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் இலங்கையின் பொருளாதார மீட்சி, ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் சுற்றுலா, விவசாயம், பால்வளம், மருந்தியல், உணவு பதப்படுத்துதல், கடல் உணவு, வாகன உதிரிபாகங்கள், மின்னணுவியல், நகைகள் மற்றும் சுகாதாரத் துறைகளில் கொட்டிக்கிடக்கும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. டாக்டர் கீதீஸ்வரன் பேசுகையில், புதுச்சேரி தொழில் நிறுவனங்கள் இலங்கையை வெறும் சந்தையாக மட்டும் பார்க்காமல், உற்பத்தி, மதிப்புக்கூட்டல் தளம் மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான நுழைவு வாயிலாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (MSME) கூட்டுத் திட்டங்கள், தொழில்நுட்ப பரிமாற்றம், முதியோர் பராமரிப்பு கட்டமைப்பு மற்றும் விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அடையாளம் காணப்பட்ட இந்த வாய்ப்புகளை உறுதியான வர்த்தக முதலீடுகளாக மாற்ற பிசினஸ்-டு-பிசினஸ் (B2B) இணைப்புகளை ஏற்படுத்தித் தர இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) முழு ஒத்துழைப்பு வழங்கும் என உறுதியளிக்கப்பட்டது.
