புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிக்கு தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

புதுச்சேரி, செப். 08:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, இரவு நேரங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 163-ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்துறை நடுவர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி அ.குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி அன்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதியும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் அட்டவணை வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் பிரச்சார காலங்களில் ஒலிபெருக்கிகளின் பயன்பாடு மிக அதிகமாக இருக்கும் என்பதால், அதனால் ஏற்படும் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், பொது அமைதியைப் பாதுகாக்கவும், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தட்டாஞ்சாவடி தொகுதியில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

இத்தடையானது இடைத்தேர்தல் நடைமுறைகள் நிறைவடையும் வரை அமலில் இருக்கும் என்றும், விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி எச்சரித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன