ரத்து செய்த பஸ் டிக்கெட் பணத்தை திருப்பித் தராத ரெட் பஸ் நிறுவனத்திற்கு ரூ.40,000 அபராதம்: புதுச்சேரி நுகர்வோர் ஆணையம் அதிரடி
புதுச்சேரி, அக். 15:
ரத்து செய்யப்பட்ட பேருந்து பயண டிக்கெட் தொகையைத் திருப்பி அளிக்காமல் காலம் தாழ்த்திய ரெட் பஸ் மற்றும் கே.பி.எஸ் ஸ்ரீ கருடா டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.40,000 நஷ்டஈடு வழங்க புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு தேவநஹள்ளியைச் சேர்ந்த மீரா சுந்தரம் என்பவர், கடந்த 2024 ஏப்ரல் மாதம் புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்வதற்காக ‘ரெட் பஸ் இந்தியா லிமிடெட்’ இணையதளம் வாயிலாக கே.பி.எஸ் ஸ்ரீ கருடா டிராவல்ஸ் பேருந்தில் 4 டிக்கெட்டுகளை ரூ.4,531.80 செலுத்தி முன்பதிவு செய்தார். தவிர்க்க முடியாத காரணங்களால் பயணத்தை ரத்து செய்த நிலையில், அதற்கான பணத்தை திருப்பித் தருவதாக ஒப்புக்கொண்ட நிறுவனங்கள், ஓராண்டுக்கும் மேலாகத் திருப்பி அளிக்காமல் இழுத்தடித்து வந்துள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட பயணி, புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் சுவிதா மற்றும் ஆறுமுகம் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘டிக்கெட் தொகையான ரூ.4,531.80-ஐ உடனே திருப்பித் தருவதுடன், சேவை குறைபாட்டிற்காக ரூ.30,000 நஷ்டஈடு மற்றும் வழக்குச் செலவாக ரூ.10,000 என மொத்தம் ரூ.40,000 வழங்க வேண்டும்’ என்று ரெட் பஸ் மற்றும் கருடா டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

