பெரம்பலூரில் மறைந்த திமுக முன்னோடி குன்னம் சி. ராஜேந்திரன் உருவப்படம் திறப்பு: அமைச்சர் கே.என்.நேரு, ஏ.ராசா எம்.பி. புகழஞ்சலி!

பெரம்பலூர்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவருமான மறைந்த குன்னம் சி. ராஜேந்திரன் அவர்களின் திருவுருவப் படத்திறப்பு விழா பெரம்பலூரில் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என். நேரு மற்றும் திமுக துணைப் பொதுச்செயலாளரும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு, அவரது திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து மலர்தூவிப் புகழஞ்சலி செலுத்தினர்.
மறைந்த குன்னம் சி. ராஜேந்திரன் திமுகவின் மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளராகப் பணியாற்றி, பெரம்பலூர் மாவட்டக் கழகத்தின் வளர்ச்சிக்காகத் தீவிர களப்பணியாற்றியவர் ஆவார். மாவட்ட ஊராட்சித் தலைவராகப் பதவி வகித்த காலத்தில் கிராமப்புற உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்த அவரது மக்கள் பணியையும், தியாக உணர்வையும் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்நிகழ்வில் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தனர்.
இவ்விழாவில் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சி.வெ. கணேசன், பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அட்சய கோபால், வழக்கறிஞர் என். இராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா. துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் Er. ஆர்.பி. பரமேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும், மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் கி. முகுந்தன், நகரக் கழகச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ. மா. ராஜ்குமார், ஒன்றியச் செயலாளர்கள் என். கிருஷ்ணமூர்த்தி, மதியழகன், சி. ராஜேந்திரன், டாக்டர் வல்லபன், அழகு. நீலமேகம், மாவட்ட மருத்துவர் அணித் தலைவர் டாக்டர் எஸ்.டி. ஜெயலட்சுமி மற்றும் ரமேஷ் ராஜேந்திரன் உள்ளிட்ட குடும்பத்தினர், கழகத்தின் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
கழகத்தின் வேர்களாகத் திகழ்ந்து மக்கள் பணியாற்றிய முன்னோடிகளின் அர்ப்பணிப்பு உணர்வை அடுத்த தலைமுறை தொண்டர்கள் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு மக்கள் நலப் பணிகளைத் தொடர வேண்டும் எனத் தலைவர்கள் இந்நிகழ்வில் எடுத்துரைத்தனர்.



