புதுச்சேரி காவல்துறை ஹேக்கத்தான் 2026: மணக்குள விநாயகர் கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பப் படைப்புகளுக்கு ஆளுநர், முதல்வர் பாராட்டு!
புதுச்சேரி:
புதுச்சேரி காவல்துறை மற்றும் கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி (MIT) ஆகியவை இணைந்து நடத்திய ‘புதுச்சேரி காவல்துறை ஹேக்கத்தான் 2026’ தொழில்நுட்பப் புதுமைப் படைப்புப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ‘ஹேக் ஃபார் எ காஸ்’ (Hack 4 a Cause) என்ற கருப்பொருளில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியில், சட்டம் ஒழுங்கு, குற்றத் தடுப்பு மற்றும் போக்குவரத்துப் பாதுகாப்புக்கான அதிநவீனத் தொழில்நுட்பத் தீர்வுகளைக் கல்லூரி மாணவர்கள் முன்மாதிரிகளாக வடிவமைத்துக் காட்சிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். மலர்க்கண் தொடங்கி வைத்து வரவேற்புரை ஆற்றினார். மணக்குள விநாயகர் கல்வி குழுமத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் எம். தனசேகரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி, பொருளாளர் டி. ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக இணையவழிக் குற்றப்பிரிவு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் எஸ். ராகவ் ஐ.பி.எஸ்., சட்டம் ஒழுங்கு எஸ்.எஸ்.பி ஆர். கலைவாணன் ஐ.பி.எஸ்., போதைப்பொருள் தடுப்புப் பணிக்குழு எஸ்.எஸ்.பி கே. தீபிகா ஐ.பி.எஸ்., போக்குவரத்துப் பிரிவு எஸ்.எஸ்.பி டி. திவ்யா ஐ.பி.எஸ். மற்றும் இணையவழிக் குற்றப்பிரிவு எஸ்.பி ஸ்ருதி எஸ். யரகட்டி ஐ.பி.எஸ். ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களின் தொழில்நுட்பத் தீர்வுகளை ஆய்வு செய்தனர்.
இப்போட்டியில் செயற்கை நுண்ணறிவு ஆவண மேலாண்மை, புவியியல் வரைபடக் குற்றப் பகுப்பாய்வு அமைப்பு, நவீன வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து விதிமுறை கண்காணிப்பு, போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறியும் கையடக்கக் கருவி ஆகிய நான்கு தலைப்புகளில் மாணவர் அணிகள் போட்டியிட்டன. இதில் ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, புதுச்சேரி பல்கலைக்கழகம், ராக் கல்லூரி மற்றும் கிறிஸ்ட் கல்லூரி அணிகள் முறையே பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றன.
இதனைத் தொடர்ந்து, கம்பன் கலையரங்கத்தில் காவல்துறை சார்பில் மூத்த குடிமக்களுக்கான ‘C.A.R.E.’ இணையவழி விழிப்புணர்வுத் திட்டம் தொடங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன், முதலமைச்சர் ந. ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் ஆகியோர் ஹேக்கத்தான் போட்டியில் வென்ற மாணவர்களுக்குக் கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினர். குற்றத் தடுப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மையில் இத்தகைய நவீனத் தொழில்நுட்ப முன்முயற்சிகள் காவல்துறைக்குப் பெருமளவில் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

