புதுச்சேரி

ஜப்பானில் நடந்த ஆசிய போட்டியில் கிராமப்புற வீரர்களே பதக்கம் குவிப்பு: துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் புகழாரம்!

புதுச்சேரி, அக்.15: புதுச்சேரி அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை இயக்ககம் மற்றும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து நடத்திய தேசிய விளையாட்டு நாள் மற்றும் ‘கேலோ புதுச்சேரி’ திருநாள் பரிசளிப்பு விழா கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி வாகை சூடிய வீரர், வீராங்கனைகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்வில் முதலமைச்சர் என்.ரங்கசாமி, அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகர், சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஆளுநர் கைலாஷ்நாதன் பேசுகையில், “சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை வென்று 4-வது இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதில் தடகளம், கபடி, மல்யுத்தம், குத்துச்சண்டை, துப்பாக்கிச் சுடுதல் மற்றும் வில்வித்தை போன்ற பிரிவுகளில் பதக்கம் வென்றவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களைச் சேர்ந்த வீரர்களே ஆவர்; குறிப்பாகப் பெண் வீராங்கனைகள் அளப்பரிய சாதனைகளைப் புரிந்துள்ளனர். நகரப் பகுதிகளில் பிரபலமாக உள்ள டென்னிஸ், பேட்மிண்டன், நீச்சல் போன்ற விளையாட்டுகளிலும் இளைஞர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டமான ‘கேலோ இந்தியா’ அடிமட்ட அளவில் உள்ள விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணர்வதில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டை வெறும் பொழுதுபோக்காகப் பார்க்காமல் வாழ்க்கைத் தொழிலாக மாற்ற அரசு ஊக்கத்தொகை மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. தனியார் நிறுவனங்கள் தங்கள் சிஎஸ்ஆர் (CSR) நிதி பங்களிப்பை விளையாட்டு உள்கட்டமைப்புக்கு முழுமையாகப் பயன்படுத்த முன்வர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் நீண்ட நாட்களாகக் காலியாக இருந்த 38 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பத் தாம் கடந்த வாரம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதன் மூலம் பள்ளிகளில் அனைத்து உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும் விரைந்து நிரப்பப்பட்டு விளையாட்டு மேம்பாட்டிற்குப் புத்துயிர் ஊட்டப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன