புதுச்சேரி அரசு அச்சகத் துறை காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் ராஜவேலு உறுதி
புதுச்சேரி, 15/10/2026: புதுச்சேரி அரசு எழுதுபொருள் மற்றும் அச்சகத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைந்து நிரப்பப்படும் என்று துறை அமைச்சர் ராஜவேலு தெரிவித்துள்ளார். தட்டாஞ்சாவடியில் உள்ள எழுதுபொருள் மற்றும் அச்சகத் துறை அலுவலகத்தில் அவர் நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்தன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த ஆய்வின் போது, அச்சகத் துறையை டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளுடன் நவீனப்படுத்துதல், அலுவலகக் கட்டிடத்தை புனரமைத்து சீரமைத்தல் மற்றும் நீண்ட நாட்களாக காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை உடனடியாக நிரப்புதல் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளைத் துறை ஊழியர்கள் அமைச்சரிடம் முன்வைத்தனர். ஊழியர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்த அமைச்சர் ராஜவேலு, இது முதற்கட்ட ஆய்வு மட்டுமே என்றும், தொடர்ந்து துறைச் செயலர் மற்றும் இயக்குநருடன் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு அனைத்துத் தேவைகளும் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், துறையின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் அதிநவீன இயந்திரங்களை வாங்குவதற்கும், அரசு ஊழியர்களின் பணிச் சூழலை மேம்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்படும் என அமைச்சர் ராஜவேலு உறுதியளித்தார்.

