பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுவாழ்வு: புதுச்சேரியில் சிறப்பு ஆவணக் குறும்படம் திரையிடல்!

புதுச்சேரி: பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் 25 ஆண்டுகால ஆட்சி நிர்வாகம் மற்றும் பொதுவாழ்வுச் சேவைகளை விளக்கும் 10 நிமிடச் சிறப்பு ஆவணக் குறும்படம் புதுச்சேரியில் இன்று சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது.
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசின் திட்டங்கள் பிரிவு சார்பில் இந்த விசேஷ நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுச்சேரியில் உள்ள தனியார் மினி திரையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அணிப் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட திரளானோர் நேரில் கலந்து கொண்டனர்.
இந்த 10 நிமிட குறும்படமானது, நாட்டின் வளர்ச்சிக்காகப் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய ஒப்பற்ற மக்கள் நலப் பணிகள், சுலபமான ஆட்சி நிர்வாக முறை, எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்திய தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியுள்ளது.
நவபாரதத்தைச் செதுக்கிய ஒரு தலைவனின் தொலைநோக்குப் பார்வையையும், நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய அர்ப்பணிப்புமிக்கப் பணிகளையும் இக்குறும்படம் மிக நேர்த்தியாக எடுத்துரைப்பதாகப் பார்வையாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இக்குறும்படம் கட்சியின் பல்வேறு அணிகள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாகப் பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

