புதுச்சேரி

மீனவ மக்களை எனக்கு எதிராக திசை திருப்புவதா? வழக்குகளை சந்திக்க தயார்: நேரு எம்.எல்.ஏ. ஆவேசம்

புதுச்சேரி, அக். 3:
புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு மனு அளிக்கச் சென்றபோது ஏற்பட்ட விவகாரத்தில், தன் மீது பொய் வழக்குகள் போடப்பட்டாலும் அதனை சந்திக்கத் தயார் என்று உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.நேரு (எ) குப்புசாமி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் லிப்ட் கேட்டுச் சென்ற பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் மாநிலத்திற்கே பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் வீட்டோடு முடங்கியுள்ள நிலையில், அவருக்கு உரிய நீதி மற்றும் இழப்பீடு பெற்றுத்தரக் கோரி அமைச்சரிடம் மனு அளிக்கவே சட்டமன்றத்திற்குச் சென்றதாகக் கூறினார். அப்போது அங்கு வந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தன்னை அலட்சியப்படுத்திப் பேசியதால் மக்களிடையே வாக்குவாதம் எழுந்ததாகவும், பின்னர் அறையில் சுமுகமாகப் பேசி முடித்த பின்னரும் இப்பிரச்சினையை திசைதிருப்பி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், எப்போதுமே மீனவ சமுதாயத்தின் உரிமைகளுக்காகவும், இட ஒதுக்கீட்டிற்காகவும் சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தனக்கு எதிராக மீனவ மக்களைத் திசைதிருப்பிப் போராட வைப்பது மிகுந்த வேதனை அளிப்பதாகக் கூறினார். குற்றவாளியைப் பாதுகாக்க அரசியல் தலையீடுகள் உள்ளதாகவும், மக்கள் பணியைத் தடுக்கவே தன் மீது வழக்குகள் பதியப்படுவதாகவும் குற்றம்சாட்டிய அவர், மக்கள் நலனுக்காகப் பதிவு செய்யப்படும் வழக்குகளைச் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயார் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன