புதுச்சேரி

ஆரோவில்லில் குரு தேக் பகதூர் சாகிப் ஜியின் 350-வது தியாக தின நினைவேந்தல்: ஆன்மீக இசை நிகழ்ச்சி அரங்கேற்றம்!

புதுச்சேரி: சீக்கிய மதத்தின் 9-வது குருவான குரு தேக் பகதூர் சாகிப் ஜியின் 350-வது ஆண்டு தியாக தினத்தை முன்னிட்டு, உலக ஒருமைப்பாடு மற்றும் மனிதநேய அன்பை வலியுறுத்தும் ஆன்மீக இசை நிகழ்ச்சி சர்வதேச நகரமான ஆரோவில்லில் பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது.

மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம், புதுச்சேரி ஸ்ரீ குருநானக் தேவ் ஜி குருத்வாரா மற்றும் ஆரோவில் பாரத் நிவாஸ் ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தன. ஆரோவில் பாரத் நிவாஸ் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அரவிந்தர் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆன்மீக ஆர்வலர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பிரபல பாரம்பரிய இசைக்கலைஞரும், சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவருமான டாக்டர் அலங்கார் சிங் பங்கேற்று சிறப்பு இசை அஞ்சலி செலுத்தினார். குரு தேக் பகதூர் சாகிப் ஜியின் உயரிய கொள்கைகளான இரக்கம், ஒற்றுமை, தியாகம் மற்றும் மனிதகுலத்தின் மீதான அன்பு ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் அவரது ஆன்மீக இசைப் படைப்புகள் அமைந்திருந்தன.

ஏற்கனவே ஆரோவில் சர்வதேச நகரில் கலாச்சாரப் பரிமாற்றங்கள் மற்றும் ஆன்மீக ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு தேசிய, சர்வதேச நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் பிரான்ஸ் நாட்டுக் குழுவினர் மாத்ரிமந்திர் வளாகத்திற்கு வருகை தந்து அமைதி மற்றும் கலாச்சார விழுமியங்களை பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

மனிதகுல ஒற்றுமை மற்றும் தியாகத்தின் மகத்துவத்தை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இசை அஞ்சலி நிகழ்ச்சி, பார்வையாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் ஆன்மீக அமைதியையும் ஏற்படுத்தியது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன