தமிழ்நாடு

விடுபட்ட மற்றும் முதல்முறை வாக்காளர்களை சேர்க்க சிறப்பு முகாம்கள்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு

சென்னை, அக். 04:

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் புதிதாக தகுதி பெற்றுள்ள இளம் வாக்காளர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொதுத் தேர்தல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியத் தேர்தல் ஆணையம் தனது 29.09.2026 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக, சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR) ஏற்கனவே நிறைவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொடர் திருத்த நடைமுறையின் கீழ் வாக்காளர் சேர்க்கை பணிகளைத் துரிதப்படுத்த அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் புதிய இளம் வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கு தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்காளர் சேர்க்கைக்கான படிவம் 6 உடன் இணைக்கப்பட்டுள்ள ‘உறுதிமொழிப் படிவம்’ (Declaration Form) ஆனது சிறப்புத் தீவிரத் திருத்தக் காலக்கட்டத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், மற்ற காலக்கட்டங்களில் வாக்காளர் பதிவு விதிகள் 1960-ன் படி வழக்கமான விண்ணப்பப் படிவங்களே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இப்பணிகளைச் செயல்படுத்துவது தொடர்பாக இன்று அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் காணொளிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட பொதுமக்கள் மற்றும் தகுதிவாய்ந்த இளம் தலைமுறையினர் பயன்பெறும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன