இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்து தற்காலிக சபாநாயகர் பதவியின் மாண்பை சீர்குலைக்கக் கூடாது: பேராசிரியர் மு.ராமதாஸ் கண்டனம்
புதுச்சேரி சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு அப்பதவியின் மாண்பை சீர்குலைக்கக் கூடாது என்று மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் மு.ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்காலிக சபாநாயகர் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று எந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது என தற்காலிக சபாநாயகர் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வாறெனில், தற்காலிக சபாநாயகர் பிரச்சாரம் செய்யலாம் என்று எந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை அவர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். எந்த ஒரு சட்டத்திலும் அத்தகைய வினோதமான நடைமுறைக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டத்தின்படி, தற்காலிக சபாநாயகர் பதவி என்பது புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவும், நிரந்தர சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் வரையிலுமான சில நாட்களுக்கான தற்காலிக ஏற்பாடு மட்டுமே ஆகும். அதற்கு மேல் அப்பதவி நீடிக்க சட்டத்தில் இடமில்லை. ஆனால், நிரந்தர சபாநாயகர் தேர்தலை நடத்தாமல் 4 மாதங்களாக தற்காலிக சபாநாயகரை நீடிக்க வைத்திருப்பதே சட்ட நோக்கத்திற்கு முரணானது.
எனவே, தற்காலிக சபாநாயகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு அப்பதவியின் கண்ணியத்தை சீர்குலைக்கக் கூடாது. அரசு உடனடியாக தற்காலிக சபாநாயகர் பதவி நீட்டிப்பைத் தவிர்த்து, சட்ட முறைப்படி நிரந்தர சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.


