காரைக்காலில் மீன்பிடி துறைமுக விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்பு: நெடுஞ்சாலையில் கிராம மக்கள் தீவிர சாலை மறியல்!
புதுச்சேரி, அக்.7: புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வதற்கு அரசு திட்டமிட்டு முடிவு செய்துள்ளது. இத்திட்டப் பணிகள் தொடங்கப்பட்டால் கிராமத்தின் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும், பல்வேறு அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகள் எழும் என்றும் கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, மீன்பிடித் துறைமுக விரிவாக்கம் மேற்கொள்ளும் இடத்தை உடனடியாக வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, கருக்களாச்சேரி கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் அதிருப்தி நீடித்து வந்தது.
இந்நிலையில், புதுவை அரசு மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையைக் கண்டித்து கருக்களாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் நாகப்பட்டினம் – காரைக்கால் செல்லும் முக்கிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் காரைக்கால் பிரதான சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.



