புதுச்சேரியில் கருப்பு பேட்ஜ் அணிந்து பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் திடீர் கண்டன ஆர்ப்பாட்டம்!
புதுச்சேரி, அக்.07:
புதுச்சேரி பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பொது மேலாளர் அலுவலகத்தின் முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வூதியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த மருத்துவ உதவித்தொகை நிறுத்தப்பட்டதைக் கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கன்வீனர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில் சங்க நிர்வாகிகள் சண்முகசுந்தரம், கொளஞ்சியப்பன், காமராஜ் உட்பட ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர். கூட்டமைப்பின் பொருளாளர் பாலசுப்பிரமணியன் முடிவில் நன்றி தெரிவித்தார்.
ஓய்வூதியர்களுக்கு மாதாந்திர மருத்துவ உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்த ரூபாய் 1,000 தொகையை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்ட உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. மேலும், நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்குத் தங்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ஓய்வூதியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து கோஷங்களை எழுப்பினர்.