புதுச்சேரியில் மழை வெள்ள தடுப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டும்: முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்!
புதுச்சேரி, அக். 7:
புதுச்சேரியில் எதிர்வரும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மழை வெள்ள தடுப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டும் என்று புதுவை மாநில அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
எதிர்வரும் மழைக்காலங்களில் அனைத்து அரசுத் துறைகளும் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் முன்னிலையில் உயர்நிலைக் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. இருப்பினும், அவற்றை முறையாகச் செயல்படுத்தி ஆரம்பக்கட்ட மழை வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்வதில் சில துறை அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியப் போக்கையே காட்டி வருகின்றனர்.
குறிப்பாக, புதுச்சேரி நகரின் முக்கிய வடிகால் பகுதியாக விளங்கும் உப்பனாறு வாய்க்கால் பாலப் பணி இன்றுவரை முழுமையடையாமல் கிடப்பில் உள்ளது. மேலும், நகரின் பல்வேறு வாய்க்கால்களும் இதுவரை முறையாகத் தூர்வாரப்படாமல் அடைபட்டு கிடக்கின்றன. மழைக்காலத்தில் அதிக பாதிப்புக்குள்ளாகும் நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட சாரம் பாலம் முதல் ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் பொது மருத்துவமனை வரை செல்லும் பிரதான வாய்க்கால் இதுவரை தூர்வாரப்படவில்லை.
இதேபோல் லெனின் வீதி வாய்க்கால் மற்றும் திருவள்ளுவர் சாலை வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை. சத்யா நகர் வாய்க்கால் பணிகளும் மிகவும் மந்தமான நிலையிலேயே நடைபெற்று வருகின்றன. எனவே, பொதுமக்களின் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கை மழை வெள்ளத் தடுப்பு பணிகளையும் அரசு உடனடியாக துரிதப்படுத்த வேண்டும்.
மேலும், தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும் முறையாகப் பின்பற்றாமல் வெள்ளத் தடுப்புப் பணிகளைத் தாமதப்படுத்தி வரும் அதிகாரிகள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓம்சக்தி சேகர் தனது அறிக்கையில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.