தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: ஆண்களை விட 1,639 பெண்கள் கூடுதலாக வாக்குப்பதிவு – வெற்றியை தீர்மானிக்கும் மகளிர் சக்தி!
புதுச்சேரி, அக். 07: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆண்கள் வாக்காளர்களை விட பெண்கள் அதிகளவில் வாக்குச்சாவடிகளுக்கு வருகை தந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் மொத்தம் உள்ள 26,921 வாக்காளர்களில், 21,756 பேர் வாக்களித்துள்ளனர். இது மொத்தமாக 80.81 சதவீத வாக்குப்பதிவாகும். பதிவான மொத்த வாக்குகளில் ஆண் வாக்காளர்கள் 10,056 பேர், பெண் வாக்காளர்கள் 11,695 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 5 பேர் அடங்குவர். இதன்படி, ஆண்களைக் காட்டிலும் 1,639 பெண் வாக்காளர்கள் கூடுதலாக வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் கடந்த சில தேர்தல்களாகவே பெண் வாக்காளர்களின் வாக்குப்பதிவு சதவீதம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்த இடைத்தேர்தலிலும் அதே நிலை நீடித்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை, இலவச அரிசி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உதவி போன்ற நலத்திட்டங்களின் தாக்கம் காரணமாக பெண்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களிக்க வந்ததாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் களத்தில் பெண் வாக்காளர்களின் ஆதரவு எந்தக் கட்சிக்கு சாதகமாக உள்ளது என்பதைப் பொறுத்தே வேட்பாளர்களின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் என்ற சூழல் உருவாகியுள்ளது.