தமிழ்நாடு

தம்பி விஜய் காட்டியது உண்மைதான்; சிறை கொடுமைகளை விவரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை, செப். 10:

சட்டமன்றத்தில் அண்மையில் எழுந்த விவாதங்கள் மற்றும் சர்ச்சைகள் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நெருக்கடி நிலைக் காலத்தில் சிறையில் தான் அனுபவித்த கொடுமைகள் குறித்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சட்டமன்றத்தில் நடந்த சர்ச்சைகள் தமிழ் மக்களுக்கும், நமது உடன்பிறப்புகளுக்கும் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியதை நான் உணர்கிறேன். இந்தச் சர்ச்சையில் எனது சிறை வரலாறு இடம்பெற்றுள்ளதால், அதைப் பற்றி பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மிசா காலகட்டத்தில் சிறையில் கொடூரமான பல கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. எங்களை அடைத்ததே தொழுநோயாளிகள் இருந்த தனி அறையில்தான். 10 பேரை ஒரு சிறிய அறைக்குள் அடைத்து வைத்திருந்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிறை அனுபவங்களை பகிர்ந்த அவர், “அந்தச் சிறிய அறைக்குள்ளேயே சிறுநீர் கழிக்க வேண்டிய அவல நிலை இருந்ததுடன், கடும் துர்நாற்றத்துக்கு நடுவேதான் நாங்கள் தூங்க வேண்டியிருந்தது. இரவில் தூங்க விடாமல் போலீசார் லத்தியால் அடித்தும், பூட்ஸ் கால்களால் மிதித்தும் சித்திரவதை செய்தனர். ஆயுள் தண்டனைக் கைதிகளை ஏவிவிட்டும் கொடூரமாக தாக்கினார்கள். அந்தத் தாக்குதலில்தான் அண்ணன் சிட்டிபாபு சிறையிலேயே உயிரிழந்தார்” என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “போலீசாரின் கொடூரத் தாக்குதலால் எனது தாடை உடைந்தது. தம்பி விஜய் தனது பேச்சின் போது கையை வைத்து தாடையைக் காட்டியது முற்றிலும் உண்மைதான். அன்று சிறையில் வாங்கிய அடிகளுக்கான தழும்புகள் இன்றும் என் உடலில் மாறாமல் இருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிக்கை தமிழக மற்றும் புதுச்சேரி அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன