கலிங்கப்பட்டி, செவல்குளத்தில் புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள்: அமைச்சர் செங்கோட்டையனிடம் துரை வைகோ எம்.பி. கோரிக்கை!

சென்னை, செப். 10:
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டத்திற்குட்பட்ட ஏ.கரிசல்குளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை இரண்டாகப் பிரித்து, புதிய அலுவலகங்கள் அமைக்க வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ நேரில் மனு அளித்து வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனைச் சந்தித்த துரை வைகோ எம்.பி. அளித்த கோரிக்கை மனுவில், “தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டத்திற்குட்பட்ட ஏ.கரிசல்குளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை இரண்டாகப் பிரித்து, கலிங்கப்பட்டி மற்றும் செவல்குளம் ஆகிய பகுதிகளைத் தலைமையிடங்களாகக் கொண்டு புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் அமைத்துத் தர வேண்டும். இது பொதுமக்களின் நலன் மற்றும் நிர்வாக வசதிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இக்கோரிக்கையைப் பரிசீலித்த அமைச்சர், தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் உடனடியாக மேற்கொள்ள இயலாது என்றும், அப்பணிகள் நிறைவடைந்தவுடன் 2027-ஆம் ஆண்டில் இக்கோரிக்கை அவசியம் செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார். அமைச்சரின் இந்த சாதகமான உறுதிமொழிக்கு துரை வைகோ நன்றி தெரிவித்துக் கொண்டார்.


