புதுச்சேரி மக்களுக்கு மாநில பாஜக தலைவர் வி.பி.ராமலிங்கம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

புதுச்சேரி, செப். 12: விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் பாஜக மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முழுமுதற் கடவுளும், வினை தீர்க்கும் தெய்வமுமான விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தி, இந்து சமுதாயத்தின் மிக முக்கியமான ஆன்மிகப் பண்டிகைகளில் ஒன்றாகும். எந்தவொரு நற்காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவும் விக்னங்களை நீக்கும் விநாயகப் பெருமானை வழிபடுவது நமது தொன்மையான பாரத பாரம்பரியத்தின் சிறப்பாகும்.
தடைகளைத் தகர்த்து வெற்றிக்கு வழிகாட்டும் விநாயகப் பெருமானை பக்தியுடன் வழிபடும் இந்த நன்னாளில், புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் திருவுருவச் சிலைக்கு எருக்கம் பூ மாலை அணிவித்து, கொழுக்கட்டை, சுண்டல், அவல், பொரி, அப்பம், பழங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்களை படைத்து பக்தி சிரத்தையுடன் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
விநாயகப் பெருமானின் பூரண அருளால் புதுச்சேரி மாநிலம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் முன்னேறி, மக்கள் அனைவரின் வாழ்விலும் நலம், வளம் மற்றும் அமைதி பெருக வேண்டும். மக்கள் அனைவரும் ஒற்றுமையோடும் புதிய நம்பிக்கையோடும் பீடுநடை போட வேண்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.



