சென்னையில் உள்ள உ.வே.சா. நூலகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு!

சென்னை:
சென்னையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘தமிழ்த்தாத்தா’ டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூலகத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் வருகை தந்து, அங்கு பாதுகாக்கப்பட்டு வரும் அரிய ஓலைச்சுவடிகள் மற்றும் பழமையான நூல்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நூலகத்தில் 350 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த சுமார் 2,170 ஓலைச்சுவடிகள் மிக கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், 1830-களில் வெளியான அரிய திருக்குறள் உரை நூல் உள்ளிட்ட 41,000-க்கும் மேற்பட்ட அரிய அச்சுப் புத்தகங்கள் இங்கு பொக்கிஷமாகப் பராமரிக்கப்பட்டு வருவதை மத்திய அமைச்சர் விரிவாகக் கேட்டறிந்தார்.
சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு போன்ற தலைசிறந்த தமிழ் இலக்கியங்கள் யாவும் இன்றைய தலைமுறையினர் எளிதாகப் படித்து உணரும் வகையில் கிடைக்கப் பெறுவதற்கு டாக்டர் உ.வே.சா அவர்களின் அயராத உழைப்பே காரணம் என்று இச்சந்திப்பின் போது மத்திய அமைச்சர் பெருமிதத்துடன் நினைவுகூர்ந்தார்.



