மயிலாடுதுறை அருகே கடலில் புதிய எண்ணெய்க் கிணறுகள் அமைக்க அனுமதி தரக்கூடாது: அன்புமணி ராமதாஸ்!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தையொட்டிய வங்கக்கடலில் அமெரிக்க நிறுவனம் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள் அமைக்க மத்திய, மாநில அரசுகள் எக்காரணத்தை முன்னிட்டும் அனுமதி அளிக்கக் கூடாது என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை கடல் பகுதியில் 81 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 5 புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி ‘ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் & புரொடக்ஷன்’ என்ற அமெரிக்க நிறுவனம் விண்ணப்பித்திருப்பது பெரும் கவலையளிக்கிறது. 1997-ஆம் ஆண்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் அமைக்கப்பட்ட கிணறுகளில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கி, தற்போது விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
கடலில் புதிய எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டால் கடல்வளமும், மீன்வளமும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் சீரழியும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் இத்தகைய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முனையும் எண்ணெய் நிறுவனங்களின் முயற்சிக்குத் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையமும், தமிழக அரசும் அனுமதி மறுக்க வேண்டும்; அத்துடன் ஏற்கனவே இயங்கும் கிணறுகளையும் மூட உத்தரவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.



