முக்கிய வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய 3 பெண் தலைமைக் காவலர்களுக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!

திருநெல்வேலி: திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கிய வழக்குகளில் சிறப்பாக புலன்விசாரணை செய்து பணியாற்றிய பெண் தலைமைக் காவலர்களுக்கு சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா.திருநாவுக்கரசு நேரில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் பல்வேறு முக்கிய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டறிவதிலும், வழக்குகளை திறம்பட கையாள்வதிலும் காவலர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றினர். இதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றிய மூன்று பெண் தலைமைக் காவலர்களின் பணியைப் பாராட்டும் நிகழ்வு நெல்லை சரக அலுவலகத்தில் நடைபெற்றது.
சிறப்பாக பணியாற்றிய அந்த மூன்று பெண் தலைமைக் காவலர்களையும் திருநெல்வேலி சரக அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்த சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா.திருநாவுக்கரசு, அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உயரதிகாரியின் இந்த நேரடி கௌரவிப்பு களப்பணியாற்றும் சக காவலர்களிடையே மிகுந்த உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



