அரியாங்குப்பத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: 5 பயனாளிகளுக்கு ரூ.8.80 லட்சம் நிதி உதவி – எம்.எல்.ஏ சி. அய்யப்பன் வழங்கினார்!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதியில், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ‘2.0 PMAY-U’ வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நிதி உதவிக்கான தவணை ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் ந. ரங்கசாமியின் வழிகாட்டுதலின்படி, அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி. அய்யப்பன் பயனாளிகளுக்கு இந்த ஆணைகளை வழங்கினார்.
இத்திட்டத்தின் கீழ் அரியாங்குப்பம் தொகுதியைச் சேர்ந்த 5 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நிதி உதவி விடுவிக்கப்பட்டது. இதில் முதற்கட்ட தவணையாக 2 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரமும், மூன்றாம் கட்ட தவணையாக 3 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரமும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை ஆய்வாளர் ஆர். விநாயகமூர்த்தி மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொகுதி முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். ஏழை மற்றும் எளிய மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்கும் நோக்கில் அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக இத்தருணத்தில் தெரிவிக்கப்பட்டது.
