கலிதீர்த்தால்குப்பத்தில் கூடுதல் ரேஷன் கடை அமைக்க வேண்டும்: முதலமைச்சருக்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கோரிக்கை
புதுச்சேரி: கலிதீர்த்தால்குப்பம் பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி கூடுதலாக ஒரு ரேஷன் கடையை உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலிதீர்த்தால்குப்பம் நியாயவிலைக் கடையில் தற்போது சுமார் 1,520 குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர். அதிகளவிலான குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நியாயவிலைக் கடையைச் சார்ந்திருப்பதால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பொருட்களைப் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டு கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
புதுச்சேரி அரசின் நடைமுறைப்படி 750 குடும்ப அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடை என்ற விகிதத்தில் செயல்பட வேண்டும். எனவே, கலிதீர்த்தால்குப்பம் பகுதி மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் அங்கு கூடுதலாக ஒரு புதிய ரேஷன் கடையைத் திறக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.