புதுச்சேரி
முருங்கப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற தபால் அதிகாரியிடம் நூதன முறையில் தங்க மோதிரம் திருட்டு
புதுவை முருங்கப்பாக்கம் அரவிந்த் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தபால் அதிகாரி ராமகிருஷ்ணன், சர்க்கரை நோய்க்கான மருந்து வாங்க லாஸ்பேட்டை சென்று திரும்பும் வழியில், திரௌபதி அம்மன் கோவில் அருகே பழங்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தி, பகலில் தங்க மோதிரம் அணிந்து வருவது பாதுகாப்பற்றது எனக் கூறி, அவர் அணிந்திருந்த 10 கிராம் எடை கொண்ட இரண்டு தங்க மோதிரங்களையும் வாங்கி கைக்குட்டையில் மடித்துக் கொடுத்துள்ளார். வீடு திரும்பிய பின் கைக்குட்டையை பிரித்துப் பார்த்தபோது மோதிரங்கள் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்த ராமகிருஷ்ணன், முதலையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் மர்மநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.