தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சேதுசெல்வத்திற்கு பொன்முடி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கு.சேது (எ) சேதுசெல்வத்தை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு ஆதரவாக முக்கிய நிர்வாகிகள் களமிறங்கியுள்ளனர்.
புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளரும், கழக கொள்கை பரப்புச் செயலாளருமான எஸ்.ஜெகத்ரட்சகன் தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தல் பிரச்சாரத்தில், முன்னாள் அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். புதுப்பேட்டை மாரியம்மன் கோவில் வீதி பகுதியில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு அவர்கள் ஆதரவு திரட்டினர்.
பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, திமுக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரளாகக் கலந்துகொண்டனர்.
