காந்தி ஜெயந்தி: புதுச்சேரியில் அக். 2-ம் தேதி மதுக்கடைகள் இயங்க தடை – கலால் துறை உத்தரவு!

புதுச்சேரி, செப். 23: தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளான காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி மதுக்கடைகள் அடைக்கப்படும் என்று கலால் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் இயங்கும் கலால் துணை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கலால் துறை ஆணையரின் ஆணைப்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் உள்ள அனைத்து கள், சாராயக் கடைகள், பார்கள் மற்றும் மது விற்பனை செய்யும் அனைத்து வகை கடைகளும் கட்டாயம் மூடப்பட வேண்டும்.
மேலும், மது அருந்த அனுமதி பெற்றுள்ள உணவகங்களில் உள்ள பார்களும் முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும், அன்றைய தினம் எவ்வித மது விற்பனையும் நடைபெறக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகள் 1970-ன் கீழ் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் துணை ஆணையர் எச்சரித்துள்ளார்.
