புதுச்சேரி

புதுச்சேரியில் எலெக்ட்ரிக் பேருந்து ஓட்டுநர்கள் திடீர் வேலைநிறுத்தம்: 25 பேருந்துகள் இயங்காமல் பொதுமக்கள் கடும் அவதி

புதுச்சேரி, அக். 06:

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொதுமக்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வரும் 25 மின்சாரப் பேருந்துகளின் ஓட்டுநர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் முக்கிய வழித்தடங்களில் பேருந்து சேவை முழுமையாக முடங்கி, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (PRTC) கீழ் தனியார் நிறுவனமான எவி டிரான்ஸ் லிமிடெட் (Evey Trans Limited) மூலம் இந்த மின்சாரப் பேருந்துகள் மொத்த ஒப்பந்த அடிப்படையில் (GCC Model) இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஒப்பந்தத்தின்படி, நடத்துநர்களை மட்டுமே போக்குவரத்துக் கழகம் நியமித்துள்ள நிலையில், ஓட்டுநர்கள் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தனியார் ஒப்பந்த நிறுவனமே நேரடியாகக் கவனித்து வருகிறது. ஓட்டுநர்களுக்கான ஊதியமும் தனியார் நிறுவனத்தாலேயே வழங்கப்படுகிறது.

இந்நிலையில், அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பணிபுரியும் தங்களுக்கு உரிய ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என ஓட்டுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ஏற்கனவே வழங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட மாதாந்திர உணவுப் படியான ரூ.2,500-ஐ மீண்டும் வழங்க வேண்டும், பணியில் இருந்து நீக்கப்பட்ட 5 ஓட்டுநர்களை உடனடியாக மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்காமல் மறைமலை அடிகள் சாலையில் உள்ள பணிமனையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதுகுறித்து ஓட்டுநர்கள் தரப்பில் கூறியதாவது, “போக்குவரத்து நெரிசல் விதிகள் மற்றும் வழித்தட மாற்றங்களுக்காக விதிக்கப்படும் அபராதத் தொகையை ஓட்டுநர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்ய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும், தானியங்கி கதவுகளால் ஏற்படும் சிக்கல்கள், ஒரு நாள் விடுமுறை எடுத்தால் வார விடுமுறையை ரத்து செய்வது, விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்குவது போன்ற தொடர் நெருக்கடிகள் தரப்படுகின்றன. இது தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பே நோட்டீஸ் வழங்கியும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று தெரிவித்தனர்.

இதனிடையே தனியார் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தரப்பில் கூறுகையில், “ஓட்டுநர்களுக்கு சமீபத்தில்தான் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. பணியில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாகவே 4 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்; ஒருவர் தானாகவே பணியை விட்டு விலகினார். போக்குவரத்து விதிமீறல்களால் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நிறுவனத்திற்கு சுமார் ரூ.15 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று விளக்கமளித்துள்ளார். இருதரப்புப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்குத் தீர்வு கண்டு, பேருந்து சேவையை விரைந்து தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன