சேதராப்பட்டில் மின்சாரம் தாக்கி டிரைவர் பலி: ஆம்புலன்ஸ் வசதி இல்லாததைக் கண்டித்து நள்ளிரவில் சாலை மறியல்!
புதுச்சேரி, அக். 06:
புதுச்சேரி அருகே சேதராப்பட்டு பகுதியில் வீட்டில் பழுதான மின்சாதனத்தை சரிசெய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி டிரைவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காததே அவரது உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி, ஆத்திரமடைந்த உறவினர்களும் அப்பகுதி பொதுமக்களும் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேதராப்பட்டு பழைய காலனி பகுதியைச் சேர்ந்தவர் அருணகிரி (41). இவர் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு வீரவேணி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், இரவு சுமார் 7:00 மணியளவில் அருணகிரி தனது வீட்டில் பழுதாகியிருந்த மிக்சியை கழற்றி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த அதிர்ச்சியடைந்து தூக்கி வீசப்பட்டு மயக்கமடைந்தார்.
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு அவசர அழைப்பு விடுத்தனர். ஆனால், சேதராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், புதுச்சேரி நகர்ப் பகுதியிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் வர வேண்டிய சூழல் உருவானது. இதனால் காலதாமதம் ஏற்படுவதை உணர்ந்த பொதுமக்கள், அருணகிரியை உடனடியாக மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்குத் தனியார் வாகனம் மூலம் கொண்டு சென்றனர்.
ஜிப்மர் மருத்துவமனையில் அருணகிரியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லாத அலட்சிய நிர்வாகமே அருணகிரியின் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் எனக் கூறி அவரது உறவினர்களும் பொதுமக்களும் கடும் ஆவேசமடைந்தனர்.
தொடர்ந்து இரவு 8:00 மணியளவில், சேதராப்பட்டு நான்குமுனை சந்திப்பான புதுச்சேரி – மயிலம் சாலையில் திரண்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேதராப்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜ், உதவி ஆய்வாளர் அலாவூதீன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்டக்காரர்கள், “சேதராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடனடியாகத் தனி ஆம்புலன்ஸ் வசதியை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். உயிரிழந்த அருணகிரியின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும்” என்று ஆணித்தரமாக வலியுறுத்தினர். நள்ளிரவு வரை நீடித்த இந்தத் திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

