புதுச்சேரி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: 5 கம்பெனி துணை ராணுவப் படை பாதுகாப்பு – மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தகவல்!

புதுச்சேரி:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து விரிவான பாதுகாப்பு மற்றும் வாக்குப்பதிவு ஏற்பாடுகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஏ.குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், “தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்காக மாவட்ட நிர்வாகம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. தேர்தல் பணிகளுக்காக 5 கம்பெனி மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) புதுச்சேரிக்கு வந்துள்ளது. இதுதவிர, புதுச்சேரி மாநில காவல்துறை மற்றும் இந்திய ரிசர்வ் பட்டாலியன் (IRBN) காவல்துறையினரும் இணைந்து தொகுதி முழுவதும் முழுமையான பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், மின்சாரம், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி, சாய்தள வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, அமைதியான மற்றும் நேர்மையான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதிசெய்ய பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன