புதுச்சேரி கிராமப்புற குடிநீர் விநியோகத்தில் புதிய மாற்றங்கள்: கசிவு ஏற்பட்டால் 24 மணி நேரத்தில் சரிசெய்ய கெடு விதிப்பு!
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள கிராமப்புறப் பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை மேலும் வலுப்படுத்தவும், குடிநீர் தொடர்பான புகார்கள் மற்றும் கசிவுகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து சரிசெய்யவும் புதிய செயல்பாட்டு மற்றும் பராமரிப்புக் கொள்கையை உள்ளாட்சித் துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் ‘ஜல் ஜீவன் மிஷன் 2.0’ திட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கொள்கையானது, கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்குத் தடையின்றி பாதுகாப்பான குடிநீர் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதுச்சேரியின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 32 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசித்து வரும் நிலையில், நிலத்தடி நீர் மட்டம் குறைதல் மற்றும் கடல் நீர் உட்புகுதல் போன்ற சவால்களை எதிர்கொள்ள இத்திட்டம் அவசியமாகிறது.
புதிய வழிகாட்டுதலின்படி, கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 55 லிட்டர் பாதுகாப்பான குடிநீர் வீட்டு இணைப்புகள் மூலம் வழங்கப்பட வேண்டும். குடிநீரின் தரம் இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதோடு, விநியோக முனையில் குளோரின் அளவு 0.20 பிபிஎம் அளவுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். மேலும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் தரைமட்டத் தொட்டிகளை மாதத்திற்கு ஒரு முறையாவது கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும்.
இப்புதிய கொள்கையில் பணிகளை விரைந்து முடிக்கக் கடுமையான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விநியோகக் குழாய்கள் அல்லது வீட்டு இணைப்புகளில் ஏற்படும் கசிவுகள் குறித்த புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டும். பிரதான குழாய்கள் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டிகளில் ஏற்படும் பழுதுகள் 48 மணி நேரத்திற்குள் சரிசெய்யப்பட வேண்டும். குடிநீர் வராதது அல்லது தரம் தொடர்பான புகார்கள் மீது 24 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். புதிய குடிநீர் இணைப்புகள் மற்றும் கட்டண முறையீடுகள் 15 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும்.
குழாய் கசிவு மற்றும் அனுமதியற்ற இணைப்புகளால் வீணாகும் குடிநீரின் அளவை அடுத்த 3 ஆண்டுகளில் 15 சதவீதத்திற்குக் கீழாகவும், 5 ஆண்டுகளில் 10 சதவீதத்திற்குக் கீழாகவும் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஸ்மார்ட் மீட்டர்கள், தானியங்கி பம்பிங் அமைப்புகள் மற்றும் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை (Command and Control Centre) மூலம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
கிராம அளவில் உள்ள குடிநீர் மற்றும் சுகாதாரக் குழுக்கள் (VWSC) இந்த அமைப்புகளைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்கும். மேலும் நிலத்தடி நீர் செறிவூட்டல், மழைநீர் சேகரிப்பு மற்றும் குளங்களை மீட்டெடுக்கும் பணிகளையும் இக்குழுக்கள் முன்னெடுக்கும். உள்ளூர் நீர்நிலைப் பயன்பாட்டாளர்கள் மற்றும் கிராம மக்களின் நேரடிக் கண்காணிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்போது குடிநீர் தட்டுப்பாடு முழுமையாக நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
