புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரே விஜய்தான்: தட்டாஞ்சாவடி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சலீம் காரசார விமர்சனம்!
புதுச்சேரி, செப். 22: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் களம் தீவிரமடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் விஜய் படத்தை பயன்படுத்துவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சலீம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் விநாயகம் போட்டியிடுகிறார். அதேசமயம், இத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தவெக ஆதரவாளர்களின் வாக்குகளை குறிவைத்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளர் சலீம், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார பதாகைகளில் ராகுல் காந்தியின் படம் இடம்பெறாமல், அதற்கு பதிலாக நடிகர் விஜயின் படம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை பார்க்கும்போது புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரே விஜய்தான் போலிருக்கிறது” என்று விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் உட்கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளதாகவும், சொந்த தலைவர்களின் செல்வாக்கை விட திரைப்பட நட்சத்திரத்தின் ஆதரவை மட்டுமே நம்பி வேட்பாளர் விநாயகம் களமிறங்கியுள்ளதாகவும் சலீம் சாடியுள்ளார். தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் களத்தில் எழுந்துள்ள இந்த விவகாரம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


