புதுச்சேரி ராக் பீச்சில் பிரம்மாண்ட கடற்கரை தூய்மைப்பணி: துணைநிலை ஆளுநர் பங்கேற்பு!

புதுச்சேரி: மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) மற்றும் PIAS அமைப்பு இணைந்து, புதுச்சேரி பாறை கடற்கரையில் (Rock Beach) மாபெரும் கடற்கரை தூய்மைப்பணியை இன்று மேற்கொண்டன.
மத்திய அரசின் ‘ஸ்வச் சாகர், சுரக்ஷித் சாகர் 5.0’ (தூய்மையான கடற்கரை! பாதுகாப்பான கடல்!) திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு தூய்மைப்பணியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கடற்கரைப் பகுதியில் குவிந்திருந்த நெகிழி மற்றும் மக்காத கழிவுகள் தூய்மைப்படுத்தப்பட்டு அகற்றப்பட்டன.
தூய்மையான கடற்கரைகள், ஆரோக்கியமான பெருங்கடல் வளம் மற்றும் நிலையான கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பைப் பேணிப் பாதுகாப்பதில் பொதுமக்களின் கூட்டு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வின் அவசியத்தை இந்நிகழ்வு வலியுறுத்தியது.


