புதுச்சேரியில் சிறப்பு குழந்தைகளுக்கு ‘Mobile DEIC’ நடமாடும் சிகிச்சை வாகனம் தொடக்கம்: அரசு மகளிர், குழந்தைகள் மருத்துவமனை நடவடிக்கை!
புதுச்சேரி, 15/09/2026:
புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், ராஷ்ட்ரிய பால ஸ்வஸ்திய காரியக்ரம் (RBSK) திட்டத்தின் கீழ் சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்கான நடமாடும் மாவட்ட ஆரம்பகால தலையீட்டு மையம் (Mobile District Early Intervention Centre – DEIC) சேவை கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.
சிறப்புக் குழந்தைகளின் இருப்பிடங்களுக்கே நேரடியாகச் சென்று ஆரம்பக்கால குறைபாடுகளைக் கண்டறிந்து சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கும் உயரிய நோக்கில் இந்த நடமாடும் சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன உபகரணங்களுடன் கூடிய இந்த நடமாடும் வாகனத்தில் பிசியோதெரபி (Physiotherapy), ஆக்குபேஷனல் தெரபி (Occupational Therapy), பேச்சுப் பயிற்சி (Speech Therapy), மற்றும் சிறப்புக் கல்வி உள்ளிட்ட பல்நோக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் சிறப்புத் தேவைகளுடைய குழந்தைகள் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்து செல்வதில் உள்ள சிரமங்களைக் குறைத்து, உரிய காலத்தில் தகுந்த சிகிச்சையளித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இத்திட்டம் பெரிதும் உதவும் என மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


